இஸ்லாமியப் பெண்ணே!

கண்ணியமிக்க படைப்பாளனாகிய அல்லாஹ் கூறுகிறான்:மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.(அல்குர்ஆன் 4:1) 

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  
 பெண்களுக்கு நலவை நாடுங்கள். நிச்சயமாக பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். விலா எலும்புகளின் மேல்பகுதி மற்றவைகளை விட மிக வளைவாக உள்ளது. அந்த எலும்பை நேராக்க நீர் சென்றால் அதனை நீர் முறித்து விடுவீர். அதனை அப்படியே விட்டு விடுவீராக! அது  வளைவாகவே இருக்கும். (ஆகவே நடுநிலையைக் கடைபிடியுங்கள்) (அபூஹூரைரா (ரலி) புகாரி முஸ்லிம்)
 
பெண் என்பவள் ஒரு குடும்பத்தின், கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கிறாள். அவளின் குணத்தையும் நடத்தையையும் வைத்தே அவள் சார்ந்த குடும்பத்தையும், பாரம்பரியத்தையும் சமுதாயம் எடை போடுகிறது. நல்ல அங்கத்தினர்களை தனது குடும்பத்திலிருந்து உருவாக்கி சமுதாயத்தில் நடமாட விடும் பொறுப்பும் பங்களிப்பும் பெண் என்பவளுக்கு அதிகம் உள்ளது.
 
 ஒரு ஆண் கல்வி கற்றால் அவன் மட்டுமே கற்கிறான். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே கல்வி கற்கிறது என்ற ஒரு அறிஞனின் கூற்றுக்கேற்ப ஒரு பெண் எத்தனை சிறப்பம்சங்களை இறையருளால் பெற்றவளாக இருக்கிறாள் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்தவர்களாக உள்ளோம்?
 
ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் தங்களின் பொறுப்பு, கடமைகளின் எல்லைக்கோட்பாட்டை உணர்ந்த வர்களாக உறுதிக் கொள்ள வேண்டும். தனிமனித வாழ்வானாலும், பொது வாழ்வானாலும் நம்மனைவரின் அதிகபட்ச அக்கறை இறையச்சத்தை மெய்ப்படுத்துவாக இருத்தல் வேண்டும்.
 
அல்லாஹ்வின் மார்க்கம் ஒவ்வொரு மனிதனின் அகத்திலும் புறத்திலும் ஏற்படுத்தும் விழிப்புணர்வை பிரதிபலிக்கும் மெய்யான சான்றுகளாய் வாழ்ந்து காட்ட வேண்டும். சுதந்திரங்கள் தவறுதலாய் பயன்படுத்துதல் கூடாது.உரிமைகள் வரம்பு மீறுதலாய் ஆகிவிடக்கூடாது.
 
ஒரு பெண் குழந்தையாய் மனைவியாய், தாயாய் பரிணமிக்கும் ஒவ்வொரு நிலையிலும் தனக்குண்டான மார்க்க அம்சங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் அவள் திகழ வேண்டும்.அதைவிட்டு அற்ப காரணங்கள், அற்ப சுகங்களுக்காக அளப்பரிய முழுமையான தன் பருவத்தை பெண்மையை முடிவில் வாழ்வையே தொலைத்துவிடும் அபலையாய் ஆகி விடுகிறாள்.இதனால் அவளும் அவளது சுற்றமும் சமூக அமைப்பும் கூனிக் குறுகிப் போய் விடுகின்றன.
 
கல்வியறிவும், நாகரீகமும் மேன்மையடைந்திருப்பதாய் சொல்லப்படும் இன்றைய உலகில் பெண் என்பவள் போகப் பொருளாகவும், போதைப் பொருளாகவுமே கையாளப் படுகிறாள்.விஞ்ஞான தொழில் நுட்பவளர்ச்சியில் பெண் என்பவள் நவீனமயமாக்கப்பட்ட ஆபாச அடிமையாகவே கிறங்கடிக்கப்படுகிறாள்.தான் அப்படித்தான் கையாளப் படுகிறோம் என்பது பெண்ணுக்குத் தெரியாமலேயே நவீனம் (மாடர்ன்), நாகரீகம் என்று அவளும் சமூகமும் மூளைச் சலவை செய்யப்படுகிறது. 
 
ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:124)
 
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 
யார் தம் இரு பெண்பிள்ளைகளை அவர்கள் பருவமெய்தும் வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்கப்படுத்துகிறாரோ அவா கியாமத் நாளில் வருவார். அவரும் நானும் இவ்வாறு இருப்போம் எனக்கூறி நபி(ஸல்) அவர்கள் தங்கள் விரல்களுக்கு மத்தியில் இணைத்துக் காண்பித்தார்கள். (அனஸ் (ரலி) முஸ்லிம்)
 
பெண்பிள்ளைகளை ஒருபாவச் சுமையாக, அவமானச் சின்னமாக கருதிக் கொண்டிருந்த அன்றைய மக்களுக்கும் இன்றைக்கு சிரமம் தரும் சுமையாக முதுகை குறிக்கும் செலவினமாக பெண்பிள்ளைகளை  கருதும் இன்றைய மக்களுக்கும் பெண்பிள்ளைகளால் எத்தகைய உயரிய அந்தஸ்தை அடையலாம் என்பதை இஸ்லாம் எடுத்துக்கூறி பெண்ணிணத்தைக் கண்ணியப்படுத்துகிறது.
 
அதேபோல் ருசித்து அனுபவித்துவிட்டு தூக்கியெறியப்படும் சந்தைப் பொருளாக பெண்களை கருதிய அன்றைய மக்களுக்கும், காட்சிப் பொருளாகவும்,கடைச்சரக்காகவும், அவசியத் தேவைக்காக முதலீடாகவும், பெண்களை பயன்படுத்தும் இன்றைய மக்களுக்கும் பெண்ணினால் எத்தகைய பெருமைகளை நெறிமுறைகளை மனிதர்கள் பெறலாம் என்பதையும் இஸ்லாம் உணர்த்திக் காட்டுகிறது. இது ஏதோ சொல்லளவில் மட்டுமின்றி செயல்முறையில் இறைநம்பிக்கைக் கொண்ட கூட்டம் செயல்பட்டு இஸ்லாம் வழங்கியுள்ள பெருமையை பெண்ணிணத்துக்கு அணிகலனாக அணிவித்திருப்பதை நாம் காணலாம்.
 
இன்னும் பாருங்கள்! அன்னை ஆயிஷா(ரலி) கூறுகிறார்கள்:
 என்னிடம் தன் இரு பெண்பிள்ளைகளைச் சுமந்தவளாக ஒர் ஏழைப் பெண்மணி வந்தாள். அவளுக்கு நான் மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன். அதனை அப்பெண்மணி தன் இரு பெண்பிள்ளைகளுக்கும் ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு தான் உண்பதற்காக ஒரு பழத்தை தனது வாயின் பக்கம் உயர்த்தினாள். அதற்குள்ளாக அவ்விரு பெண்பிள்ளைகளும் அப்பழத்தையும் உண்ணக் கேட்டனர். உடனே அப்பெண்மணி தன் உண்ண விரும்பிய அப்பழத்தை இரண்டாகப் பிளந்து அவ்விரு பெண்பிள்ளைகளுக்கும் கொடுத்தாள். அப்பெண்மணியின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் இதனை நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள் அப்பெண்ணுக்கு இதற்காக சுவனத்தை அல்லாஹ் அவசியமாக்கி விட்டான். நரகை விட்டும் அப்பெண்மணியை விடுவித்து விட்டான் எனப் பகர்ந்தார்கள்.(முஸ்லீம்)
 
ஒரு பெண் தன் பிள்ளைகளிடம் காட்டிய அரவணைப்பிற் காகவும் அன்பிற்காகவும் மகத்தான பேரன்பாளனாகிய அல்லாஹ்விடம் சுவனத்துக்குரிய அந்தஸ்தை அடைந்து விட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதிப் படுத்துவதை மேற்கூறிய செய்தியில் நாம் காணலாம்.
 
புதுமைப் பெண், புரட்சிப் பெண் என்றெல்லாம் சிந்தனையாளர்களால் உருவகப்படுத்தப்படும் பெண் ஆக்ரோஷத்தால் அவதிப்படும் அபலைகளாக இருப்பதை தான் காண முடிகிறதே தவிர இஸ்லாம் கூறும் இறைப் பொருத்தங்களுக்கு உட்பட்டவளாய் இருப்பதில்லை. புதுமைகளைப் போதிப்பதாய் கூறி மடமைகள் நிறைந்த பேதைகளாய் பெண்களை ஆக்கும் போக்கே புதுமைப் பெண்களிடம் நிறைந்திருப்பதை நாம் காண முடிகிறது.
 
இந்த மடமைகள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பிரபல்யப்படுத்தப்படுவதால் அதன் மாயைகளுக்கு நல்ல பெண்களும் பலியாகும் நிலை அல்லது பலியாக்கும் அவலத்திலிருந்து நாம் எச்சரிக்கை அடைய வேண்டும்.

 மகத்துவமிக்க அல்லாஹ் தன் திருமறையில்:
அவர்களுடன் (உங்கள் மனைவிகளுடன்) நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான் (அல்;குர்ஆன் 4:19)

 அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 ஒரு மூஃமினான ஆண் (கணவன்) ஒரு மூஃமினான பெண்ணை (மனைவி) வெறுக்க வேண்டாம். அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் அவளிடமுள்ள வேறொரு குணத்தைக் கொண்டு பொருத்திக் கொள்வாயாக! (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம்)

 பெண்களைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் நல்லுபதேசம் கூறும் பொழுது: உங்களில் ஒருவர் தம் மனைவியை அடிமையை அடிப்பது போல் அடித்து விடுகிறார். பின்னர் அதே நாளில் இறுதியில் (இரவில்) அவர் அவளைச் சேர்த்துக் கொள்ள கூடும். (இந்த நிலையில் இருக்கும் அவர் மனைவியைக் கடுமையாக அடித்துத் துன்புறுத்துவது சரியாகுமா? ஆகவே அவளுடன் அவர் இதமாக நடந்து கொள்ளட்டும்.(அப்துல்லாஹ் பின் ஜம்ஆ(ரலி)புகாரி,முஸ்லிம்)

மூஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர், அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! உங்களின் மனைவியரிடம் சிறந்தவர்களே உங்களில் சிறந்தவர்கள். (அபூஹூரைரா(ரலி) திர்மிதி)

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
 சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும் ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவி விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். படுக்கைகளில் விலக்குங்கள். அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும் பெரியவனாகவும் இருக்கிறான். (4:34)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்துரைத்த பின், அறிந்துக் கொள்ளுங்கள்! பெண்களுக்கு நன்மையை நாடுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.இதனைத் தவிர வேறெதனையும் நீங்கள் அவர்களிடமிருந்து சொந்தப் படுத்திக் கொள்ள முடியாது. அவர்கள் பகிரங்கமான மானக்கேடான செயலை செய்து வந்தாலே தவிர! அவ்வாறு அவர்கள் பகிரங்கமான மானக்கேடான செயலைச் செய்தால் அவர்களை படுக்கையை விட்டு விலக்குங்கள். (அதற்குப் பின்னரும் அவர்கள் செய்தால்) கடும் வேதனை தராத லேசான அடியாக அவர்களை அடியுங்கள். அப்பொழுது அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டு விட்டால் அவர்களுக்கு வேதனை தரும் வேறு எந்த வழியையும் நீங்கள் தேடாதீர்கள். அறிந்துக் கொள்ளுங்கள்! உங்கள் மனைவியரிடம் உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. உங்களிடம் உங்கள் மனைவியருக்கு சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியரிடம் உங்களுக்குள்ள உரிமைகளாவன: உங்கள் விரிப்புகளை நீங்கள் வெறுக்கும் எவரையும் மிதிக்க விடாதிருப்பதும் உங்கள் இல்லங்களில் நீங்கள் வெறுக்கும் எவரையும் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். உங்களிடம் உங்கள் மனைவியருக்குள்ள உரிமையாகிறது, அவர்களுக்கு உடையும், உணவும் அழகிய முறையில் நீங்கள் அளித்து வருவதாகும்( அம்ரு பின் அஹ்வஸீல் ஜூஷமி(ரலி) (திர்மிதி)

 தீன்குலப்பெண்ணே! ஒழுக்கமிக்க குடும்ப வாழ்வை – குடும்ப அமைப்பை அல்லாஹ் விரும்புவது மாதிரி வேறு எவரும் விரும்புவதில்லை. எந்த அளவுக்கு அல்லாஹ் விரும்புகிறான் என்று சொன்னால் இல்லற வாழ்வை இஸ்லாமிய வணக்கங்களில் ஒன்றாக ஆக்கி கோட்பாடுகளில் ஒன்றாக ஆக்கி மனித இனத்தை அல்லாஹ் ஊக்கப்படுத்துகிறான். அதற்கு இம்மையிலும் மறுமையிலும் மகத்தான பாதுகாப்பு மிக்க நற்கூலிகளையும் அல்லாஹ் தருகிறான்.

 கண்டதே காட்சி! கொண்டதே கோலம் என்ற ரீதியிலான வாழ்வை அல்லாஹ் விரும்புவதேயில்லை. எப்படி வேண்டு மானாலும் வாழ்வை அமைத்துக் கொள்ளலாம். யாரும் நம்மை எதுவும் கேட்கக் கூடாது என்ற மாதிரியான வாழ்வும் நன்மைகளைப் பெற்று தராது.
 
உலக கவர்ச்சியும், உடல்வேட்கையும் அப்போதைக்கு மயக்கம் தரும். ஆனால் நிரந்தர அவமானத்தில் கொண்டு போய் நம்மை தள்ளி விடும். மாற்றுமதத்தினரோடு ஒடிப் போவதும், பெயர் மாற்றி திருமணம் செய்துக் கொள்வதும் கள்ள உறவுகள் வைத்துக் கொள்வதும் மிகப் பெரும் புரட்சியோ தைரியமோ அல்ல. மாறாக மனோஇச்சைகளை இனங்கண்டு வெல்ல முடியாத கோழைத்தனமாகும். மகத்தான இறைவனை நோவினைப்படுத்துவதாகும்.
 
  உனக்காக உன் நலனுக்காக உன் வளமான வாழ்வுக்காக உன் குடும்பத்தைச் சேர்ந்த ஆண், அது தந்தையோ சகோதரனோ கணவனோ சொந்த மண்ணிலோ அல்லது அயல்நாட்டிலோ உனக்கு எல்லா வசதிகளையும் அவர்கள் அல்லாஹ்வுக்காக ஏற்படுத்தி தருகின்றனர். ஆனால் நீயோ அவர்களின் எந்த தியாகத்தையும் உழைப்பையும் உணர்ந்து நடப்பதாக தெரியவில்லை.

  உன் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் நினைத்தால் அது அயல்நாடானாலும் சரி, உள்நாடானாலும் சரி அவன் சொற்ப தொகையை செலவழித்தால் நாளொரு பெண்ணும் பொழுதொரு சுகமும் அனுபவிக்க முடியுமே!

 மொழிவாரியாக, நாடுவாரியாக, கலர்வாரியாகப் பெண்ணைத் தேடி அடைய முடியும் அது அவனுக்கு இலகுவானதே! ஆனாலும் அது வாழ்க்கையல்ல! வாழும் முறையுமல்ல! என்பதை உணர்ந்து நமக்கென்று ஓர் குடும்பம் ஊரில் உள்ளது  அதில் நற்பாக்கியங்கள் நிறைந்துள்ளது என்று வருடங்களாய் தன் உணர்ச்சிகளை புதையலாய் தேக்கிக் கொண்டு ஹலாலான உன்னை நாடி ஓடிவருகிறான் ஆனால் நீயோ உன்வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் எந்த வகையிலும் உதவாத கழிசடைகளோடு சங்கமிக்கிறாய்.

இது எந்த வகையில் நியாயம்? இது எப்படிப்பட்ட ஈனம் என்பதை உணர்ந்தாயா? இதுதான் படைத்த இரட்சகனுக்கும் அவனது பேரருளால் அரவணைப்போருக்கும் நாம் செலுத்தும் நன்றி உபகாரமா? சிந்திக்க வேண்டாமா? விழிப்புணர்வுடன் வாழ வேண்டாமா?

 இறைதிருப்தியை தரக்கூடிய இலகுவான சட்ட திட்டங்களால் இவ்வாழ்வை அமைத்துக் கொள்வதில் தான் பாக்கியங்கள் நிறைந்துள்ளது.   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: