தோழியர்- நுஸைபா பின்த் கஅப் نسيبة بنت كعب

நுஸைபா பின்த் கஅப்

نسيبة بنت كعب

பொய்யன் முஸைலமாவின் அரசவை. நிறைய மக்கள் குழுமியிருந்தனர். “யாரங்கே கொண்டு வாருங்கள் அந்தத் தூதுவனை” என்று கட்டளை பிறப்பிக்கப்பட, கனத்த சங்கிலிகளால் அவரைப் பூட்டி, இழுத்து வந்தார்கள் காவலர்கள். கால்விலங்கு தரையில் புரள வந்து நின்றார் ஹபீப் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு. இவரது வரலாற்றை நாம் முன்னர் விரிவாகவே பார்த்தோம். இங்கு முன் கதைச் சுருக்கம்போல் முக்கிய நிகழ்வொன்றை மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம்.

முகத்தில் எவ்விதக் கலக்கமோ, கலவரமோ இல்லாமல், மிகவும் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார் ஹபீப். அவர் என்ன குற்றம் செய்தார் என்று விலங்கு, பூட்டு, விசாரணை? அதைக் காண மொய்த்திருக்கும் கூட்டம்?

தானும் ஒரு நபி என்று உளற ஆரம்பித்து மக்களை வழிகெடுக்க முனைந்துவிட்ட முஸைலமாவை எச்சரித்து நபியவர்கள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதைச் சுமந்து வந்த தூதர், தோழர் ஹபீப் இப்னு ஸைது. தொன்றுதொட்டு தூதர்களுக்கு என்று அளிக்கப்பட வேண்டிய கௌரவம் உண்டு; அவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு. அதெல்லாம் பொது விதி. ஆனால், நபியவர்களின் எச்சரிக்கை அளித்த கோபத்தில், என்ன செய்வது என்று தெரியவில்லை மடையன் முஸைலமாவுக்கு. ஹபீபைக் கைது செய்து, மறுநாள் விசாரணைக்கு இழுத்துவரச் சொல்லியிருந்தான்.

முஸைலமா அவரை நோக்கிக் கேட்டான். “முஹம்மத் யார்? அல்லாஹ்வின் தூதரா?”

உடனே பதில் வந்தது. “ஆம். முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்”

கோபத்தால் வெடித்துவிடுவதைப்போல் அவரைப் பார்த்த முஸைலமா அடுத்த கேள்வி கேட்டான். “நானும் அல்லாஹ்வின் தூதன்தான் என்பதற்கு நீ சாட்சி கூறுகிறாயா?”

“எனக்குக் காது கொஞ்சம் மந்தம். நீ சொல்வது எனக்குக் கேட்கவில்லை”, முகத்தில் நையாண்டி எதுவும் வெளிக்காட்டாமல் அப்பாவியாய் பதில் கூறினார் ஹபீப்.

சீற்றத்தில் முகம் வெளுத்தது முஸைலமாவுக்கு. உதடுகள் துடித்தன. “அவர் உடலில் ஒரு பகுதியை வெட்டி எறியுங்கள்” என்றான்.

காத்திருந்த காவலன், “அப்படியே ஆகட்டும்” என்று கூர்மையான வாள் கொண்டு அவரது உடலின் ஒரு பகுதியை வெட்டி எறிய, நிலத்தில் விழுந்தது அது. தரையெல்லாம் ரத்தம்.

“முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி பகர்கிறாயா?” என்று மீண்டும் தன் கேள்வியைக் கேட்டான் முஸைலமா.

இப்பொழுதும் உடனே பதில் வந்தது. “ஆம். முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்.”

“நானும் அல்லாஹ்வின் தூதரென்று சாட்சி கூறுகிறாயா?”

“நான்தான் சொன்னேனே, எனக்குக் காது மந்தம் என்று. அதனால் நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குக் கேட்கவில்லை”

கோபம் மேலும் அதிகமானது பொய்யனுக்கு. மற்றுமொரு பகுதியை வெட்டச் சொன்னான். உடலின் மற்றுமொரு பகுதி தரையில் விழுந்தது. குழுமியிருந்த கூட்டத்தாருக்கு அவரின் உறுதியையும் விடாப்பிடிக் கொள்கையையும் பார்த்து வியர்த்துக் கொட்ட, இவருக்கோ குருதி கொட்டிக் கொண்டிருந்தது.

முஸைலமாவும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருக்க, மீண்டும் மீண்டும் அதே பதில் வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடையில் தொங்கும் ஆட்டிறைச்சியை வெட்டுவார்களே அதைப்போல், காவலனும் ஹபீபின் உடலை பாகம் பாகமாய் வெட்டிக் கொண்டிருந்தான்.

பாதிக்கும் மேற்பட்ட அவரது அங்கங்கள் தரையில் துண்டுகளாக சிதறிக் கிடக்க, மறுபாதி இரத்தக் களறியில் படுகோரமாய் உருமாறிக் கிடந்தது. ஆனாலும் அவர் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் மட்டும் மாறவில்லை. “முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று சொன்னபடியே இறுதியில் விடைபெற்றது அவரது ஆவி. குற்றுயிராய் இருந்தவர் முற்றிலுமாய் இறந்து விழுந்தார். ஹபீப் இப்னு ஸைத் அல்-அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு.

செய்தி மதீனா வந்து சேர்ந்தது. அவரின் தாயாரையும் அடைந்தது. மகன் இறந்த செய்தி ஒரு தாய்க்கு எத்தகைய சோகச் செய்தி? அதிலும் கண்டதுண்டமாய் வெட்டிக் கொல்லப்பட்டார் என்றால் பெற்ற வயிற்றுக்கு அது எவ்வளவு வலி?

ஆனால் அதைக்கேட்ட அவரோ, “இத்தகைய ஒரு நிகழ்வுக்காகத்தான் நான் அவனை வளர்த்தும் உருவாக்கியும் வந்தேன். என்னுடைய நற்கூலியையும் அவனுடைய பரிசையும் அல்லாஹ்விடமே தேடுகிறேன்” என்றார் எளிதாய்!

“சிறுவனாய் இருக்கும்போது, ஒருநாள் இரவு அகபாவில் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்து தந்தான். அதைப் பெரியவனானதும் நிறைவேற்றிவிட்டான் என் மகன். எனக்கு அல்லாஹ் வாய்ப்பளித்து முஸைலமாவை நான் நெருங்கினால், அவனது இழப்பிற்காக தங்களது முகத்தை அறைந்து கொண்டு துன்பத்தில் அரற்றுவதற்கு அவனுடைய மகள்களுக்கு நல்ல வாய்ப்பளிப்பேன்”

தம் மகனின் கோர முடிவைக் கேட்ட அந்த வீரத் தாய் நுஸைபா பின்த் அல் கஅப் அல்-மாஸினிய்யாவின் பதில் அவ்வளவுதான்! ரலியல்லாஹு அன்ஹா.

oOo

யத்ரிப் நகரில் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வந்தது. தந்தை, தாய், இரு மகன்கள் என்ற அளவான குடும்பம். எப்பொழுதும்போல் அவர்களது பொழுது ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் மக்காவிற்கு யாத்திரை சென்று வந்த யத்ரிப் மக்கள் சிலர் தம்முடன் மக்காவாசிகள் ஓரிருவரை அழைத்து வந்திருந்தனர் – முஸ்அப் இப்னு உமைர், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் – ரலியல்லாஹு அன்ஹுமா.

‘இவர்கள் சொல்வதைக் கேளுங்களேன்’ என்று மக்காவாசிகளைத் தம் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள் வந்தவர்கள். துவங்கியது முஸ்அப் இப்னு உமைரின் பணி. ஏறக்குறைய யத்ரிபின் அனைத்து வீட்டுக் கதவுகளையும் அவரது செய்தி தட்டியது. காந்தமாய் மாறிப்போனார் அவர். அதன் பலன் அடுத்த யாத்திரை காலத்தில் 73 ஆண்களும், 2 பெண்களும் கொண்ட மதீனத்துக் குழு, மக்கா சென்றது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க. அந்தக் குழுவில் மேற்சொன்ன குடும்பமும் அடக்கம்.

மக்காவிற்குச் சென்று புனித யாத்திரை முடித்த அந்தக் குழுவினர் இரண்டாம்நாள் ஊர் உறங்கிய நள்ளிரவு நேரத்தில் அகபா பள்ளத்தாக்கில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரகசிய சந்திப்பு நிகழ்த்தினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. அதன் முடிவில் நபியவர்களுக்கும் அந்த யத்ரிப் குழுவினருக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இரண்டாம் அகபா உடன்படிக்கை.

தங்களது “உயிர், பொருள், செல்வம்” அனைத்திற்கும் மேலாய் நபியை ஏற்றுக் கொள்வதாகவும் காப்பாற்றுவதாகவும் அவர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தனர்.

அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த சத்தியப் பிரமாணத்தில் கலந்து கொண்டனர். ஸைத் இப்னு ஆஸிம், அவரின் மனைவி உம்மு உமாரா எனும் நுஸைபா பின்த் கஅப் அல்-மாஸினிய்யா, அவர்களின் இரு மகன்கள் அப்துல்லாஹ் இப்னு ஸைத் மற்றும் ஹபீப் இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹும்). உம்மு உமாரா என்பது புனைப்பெயராகத்தான் நுஸைபாவுக்கு ஏற்பட்டு இருந்ததே தவிர அவருக்கு உமாரா என்ற பெயரில் மகனோ மகளோ இல்லை.

அந்தக் குழுவில் இரண்டு பெண்கள் என்று பார்த்தோமல்லவா? உம்மு உமாராவுடன் இடம்பெற்றிருந்த மற்றொரு பெண் உம்மு முனீஃ என்ற அஸ்மா பின்த் அம்ரு இப்னு அதீ. அஸ்மாவும் தம் மகனுடன் வந்திருந்தார்; நமக்கு நன்கு அறிமுகமான முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு. இந்தப் பெண்கள் இருவரும் பிரமாணம் அளிக்கும் முறை வந்ததும், “ஆண்களது பிரமாணத்தை ஏற்றுக்கொண்ட அதே நிபந்தனைகளுடன் பெண்களின் பிரமாணத்தையும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்நியப் பெண்களின் கைகளைப் பிடிக்கமாட்டேன்” என்று தெரிவித்துவிட்டார்கள் நபியவர்கள். அதன்படி அதே நிபந்தனைகளுடன் அந்த இரு பெண்மணிகளும் பிரமாணம் அளித்தனர். சத்தியமான பிரமாணம்.

அதன் பிறகு, குழு மதீனா திரும்பி, தம் வாசலை அகலத் திறந்து வைத்தது – மக்காவிலிருந்து வரப்போகும் முஸ்லிம்களுக்காக. நிறைய முஸ்லிம்கள் யத்ரிபிற்குப் புலம் பெயர்ந்தனர். முத்தாய்ப்பாய் அமைந்தது நபியவர்களின் ஹிஜ்ரத். யத்ரிப் மதீனாவானது.

நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்தபின் நிகழ்வுற்ற முதல் யுத்தமான பத்ருப் போரில் நுஸைபாவின் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு கஅப் அல் மாஸினீ (ரலி) எனும் வீரர் கலந்து கொண்டார். சில காலத்தில் ஹபீபின் தந்தை ஸைத் இப்னு ஆஸிம் இறந்து விட்டதால், நுஸைபா, கஸிய்யா இப்னு அம்ரு என்பவரை மறுமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு தமீம் என்றொரு மகனும், ஃகவ்லா எனும் மகளும் பிறந்தனர்.

பத்ருப் போர் முடிந்த அடுத்த ஆண்டே நிகழ்ந்தது அடுத்த போர் – உஹதுப் போர். இந்தப் போரில் நுஸைபா, அவரின் கணவர் கஸிய்யா, நுஸைபாவின் மூத்த மகன் அப்துல்லாஹ் இப்னு ஸைது ஆகியோரும் கலந்து கொண்டார்கள். “கலந்து கொண்டார்கள்” என்ற அளவிலான சிறு வாக்கியத்தில் முடித்துவிட முடியாத வீர நிகழ்வாய் வரலாற்றில் இடம் பெற்றுப்போனது அது.

உஹதுப் போரின் ஆரம்பத் தருணங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாகத்தான் இருந்தன. மலையுச்சியில் காவலுக்கிருந்த முஸ்லிம் வீரர்கள் ‘போர் முடிந்துவிட்டது’ என நினைத்து, தங்களுக்கு நபியவர்கள் இட்ட கட்டளையை மறந்து கீழே இறங்கி ஓடிவந்ததும்தான் போரின் போக்கு மாறிப்போனது. அதுவரை முஸ்லிம் போர் வீரர்களுக்கு குடிநீர் அளிப்பது, காயங்களுக்குச் சிகிச்சை புரிவது போன்ற ஒத்தாசை சேவைகளில் மட்டும் இதரப் பெண்களுடன் ஈடுபட்டிருந்தார் நுஸைபா.

சடுதியில் எதிரிகளின் கை ஓங்கி, நிலைமை மோசமாகி, முஸ்லிம் வீரர்களின் கட்டுக்கோப்புக் குலைந்து போனதும் நுஸைபாவின் வீரம் பொங்கி எழுந்தது. நபியவர்களைச் சுற்றி மிகச் சில தோழர்களே நின்றிருந்தனர். பதட்டம், ஆத்திரம், கவலை என்று அனைத்தும் உணர்வில் கலந்துபோய் தம் கணவர், மகன் ஆகியோருடன் தாமும் நபியவர்களை நோக்கி ஓடினார் நுஸைபா. நபியவர்களைச் சூழ்ந்து காத்து நின்று போர் புரிந்து கொண்டிருந்தார்கள் சில தோழர்கள். அவர்களுடன் சேர்ந்து கொண்டார். தகுந்த கேடயம்கூட அப்பொழுது அவரிடம் இல்லை. அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாய்த் தோன்றவில்லை. நபியவர்களைக் காக்க வேண்டும்; அவர்களுக்கு எந்த பாதகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவர் நினைவு முழுதும் அந்த ஒரே ஒரு கவலை மட்டுமே ஆக்கிரமித்திருந்தது.

நிராயுதபாணியாக இருக்கும் நுஸைபாவின் நிலையைக்கண்டு, ஓடிக்கொண்டிருந்த ஒருவனிடம், “உனது கேடயத்தை சண்டையிடுபவரிடம் கொடுத்துவிட்டுச் செல்” என்றார்கள் நபியவர்கள். அதை வாங்கி ஏந்திக்கொண்டு, இடுப்பில் துணியைச் சுற்றி இறுக்கக் கட்டிக்கொண்டு, முழுஅளவிலான சண்டையில் மூர்க்கமாய் வாள்வீசி இறங்கிவிட்டார் நுஸைபா. மிகுந்திருந்த எதிரிகளின் எண்ணிக்கையைப் பற்றிய அச்சமோ, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பின்னடைவினால் தயக்கமோ, தடுமாற்றமோ அவருக்கு ஏற்படவில்லை. ஆணுக்கு நிகராகச் சண்டை இட்டிருக்கிறார் அவர். சாட்சி உரைக்கின்றன அன்றைய அவரின் வீரச் செயல்கள்.

குரைஷிகளின் குதிரைப்படை நிறைய சேதம் விளைவித்துக் கொண்டிருந்தது. அதையெல்லாம் வெகு சில தோழர்கள் கொண்ட அந்தக் குழு எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தது. “அவர்கள் மட்டும் எங்களைப் போன்ற காலாட்படையாக இருந்திருந்தால் அவர்களுக்குப் படுதோல்வியை அளித்திருப்போம்” என்று பின்னர் ஒருமுறை கூறியுள்ளார் நுஸைபா. வாள் வீச்சு, அம்பு எய்தல் என்று மாறி மாறி துள்ளி இயங்கிக்கொண்டிருந்த நுஸைபாவை நோக்கிக் குதிரையொன்று வேகமாய் வந்தது. அதன்மீது இப்னு குமைய்யா எனும் குரைஷி. வந்த வேகத்தில் நுஸைபாவின் தோள்பட்டையில் வெகு பலமாய் வெட்டினான் அவன். அந்த வேகத்துக்குத் துவண்டிருக்க வேண்டும் அவர். ஆனால் அதைத் தாங்கிய நுஸைபா, தம் கேடயத்தால் தற்காத்துக்கொண்டு மேலும் கடுமையாய்ப் போர் புரிய ஆரம்பித்தார். மேற்கொண்டு அவனால் அவரைத் தாக்க முடியவில்லை. திரும்பிவிட யத்தனித்தான் இப்னு குமைய்யா. ஆனால் நுஸைபா ஒரு காரியம் செய்தார். அவன் அமர்ந்திருந்த குதிரையின் கால்களை தம் ஆயுதத்தால் பலமாகத் தாக்கி முடமாக்க, சடேரெனச் சரிந்தது குதிரை. ‘தொப்’பென்று மல்லாக்கத் தரையில் விழுந்தான் அவன்.

இதற்கிடையே இதைக் கவனித்துவிட்ட நபியவர்கள், நுஸைபாவின் மகனை நோக்கி, “உம்மு உமைராவின் மகனே! உன் தாயார்! உன் தாயார்! அவரது காயத்திற்குக் கட்டு இடு,” என்று கத்தினார்கள். நுஸைபாவுக்கு ஏற்பட்ட காயம் மிக மிக ஆழமான வெட்டு. நிறைய இரத்தம் கொப்பளித்து வழிந்து கொண்டிருந்தது. “யா அல்லாஹ்! இவர்களைச் சொர்க்கத்தில் என் தோழர்களாக ஆக்கி வைப்பாயாக” என்று இறைஞ்சினார்கள் நபியவர்கள்.

அந்த வார்த்தைகள் நுஸைபாவின் செவியில் தெளிவாய் விழுந்தன. தெள்ளத் தெளிவாய் அதன் அர்த்தத்தை உணர்ந்தார் அவர். நம் வாழ்வு உய்வுற இது போதாது? மகிழ்ச்சி பொங்கச் சொன்னார், “ஆஹா!…. இதன்பிறகு இவ்வுலகில் எனக்கு என்ன நிகழ்ந்தாலும் கவலையே இல்லை.” எல்லாம் துச்சம்!

மகன் தம் உதவிக்கு வரும்வரை நுஸைபா காத்திருக்கவில்லை. கீழே விழுந்தவனைச் சரமாரியாகத் தாக்கி அவனைக் கொன்றுவிட்டுத்தான் நின்றார். நுஸைபாவுக்கு ஏற்பட்ட அந்தக் காயம் எத்தனை ஆழமாக இருந்ததென்றால் பின்னர் அதற்காக ஓர் ஆண்டுவரை அவர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அன்று போரில், களத்தில், என்ன துணி கிடைத்ததோ அதை எடுத்து காயத்தைச் சுற்றி கட்டிக்கொண்டு அவர் போரைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

அவரின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸைதுக்கும் பலமான காயம் ஏற்பட்டிருந்தது. தடுத்து நிறுத்த இயலாமல் எக்கச்சக்க இரத்தம் ஓடியது. “உனது காயத்துக்குக் கட்டுப்போடு” என்றார்கள் நபியவர்கள். இதைக் கவனித்துவிட்ட நுஸைபா தம் மகனிடம் விரைந்து வந்தார். பெற்ற மகனின் ரத்தம் பொங்கும் காயத்திற்குத் தம் இடுப்புத் துணியைக் கிழித்து பாசம் பொங்க கட்டு இட்டவர் அடுத்து பேசியது வீரம்.

“எழுந்திரு மகனே! எதிரிகளைத் தாக்கு.”

“இன்று நீர் பொறுத்துக் கொள்வதைப்போல் எவரால் பொறுத்துக்கொள்ள முடியும் உம்மு உமாரா?” என்றார்கள் நபியவர்கள்.

அப்துல்லாஹ்வைத் தாக்கிய எதிரி மீண்டும் அங்கு நெருங்கினான். அவனை நுஸைபாவுக்கு அடையாளம் காண்பித்தார்கள் நபியவர்கள்.

“அவன்தான் உம் மகனைத் தாக்கியவன்.”

அவனை நோக்கி புலியாய்ப் பாய்ந்தார் நுஸைபா. அவனது கெண்டைக்காலில் தம் வாளால் பலமான போடு. ‘மளுக்’கென்று முழங்கால் மடங்கி தரையில் விழுந்தான் அவன். முஸ்லிம்கள் அவனைச் சுற்றி வளைத்தனர். கொன்று முடித்தனர். கடைவாய்ப்பல் தெரியுமளவு சிரித்தார்கள் நபியவர்கள். “பழிவாங்கிவிட்டாய் உம்மு உமாரா. உன்னை மேலோங்க வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்றார்கள்.

பின்னர் இந்நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது “உஹதுப் போர் நாளன்று இடப்புறம், வலப்புறம் என்று எங்கு திரும்பினும், நுஸைபா என்னைத் தற்காத்து போர் புரிவதைக் கண்டேன்” என்று நபியவர்கள் தெரிவித்துள்ளார்கள். அப்படிச் சுழன்றுச் சுழன்று போரிட்ட நுஸைபாவுக்கு அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் பன்னிரெண்டு.

சிராய்ப்புக் காயம், நகம் பெயர்ந்தது, பிடரியில் வலி போன்ற விஷயமெல்லாம் இல்லை. உம்மு ஸயீத் பின்த் ஸஅத் இப்னு ரபீஉ என்பவர் ஒருமுறை நுஸைபாவின் உஹதுப் போர் நிகழ்வைக் குறிப்பிடும்போது, “நுஸைபாவின் கழுத்துக்கும் தோளுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெரும் பள்ளம் ஒன்றைக் கண்டேன். அந்தப் போரில் அவர் அடைந்த காயம் அது” என்று கூறியிருக்கிறார். தோள்பட்டையில் சதை காணாமல் போய் ஏற்பட்ட பள்ளம்!

இக்காலத்தில் அலங்காரம் என்ற பெயரில் கண்ட இடத்தில் உடலைப் பொத்தலாக்கி அலங்கோலமாக்கிக் கொள்வது நாகரீகம். அவர்களோ இறைவனுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் தம் உடல் அலங்கோலமானாலும் பரவாயில்லை என்று களம் புகுந்து வெளிவந்திருக்கிறார்கள். அகமெல்லாம் பேரழகாகிப் போனது.

அதன் பின்னர் ஹுதைபிய்யா உடன்படிக்கை, ஃகைபர் யுத்தம், மக்காவின் வெற்றி, ஹுனைன் யுத்தம் என்று எந்த எந்த முக்கிய நிகழ்வுகளையும் தவறவிடவில்லை நுஸைபா. இவ்விதம் வீரமே வாழ்க்கையாக வாழ்ந்தவரின் மகன் ஹபீப் இப்னு ஸைதைத்தான் முஸைலமாவிடம் தம் தூதராக அனுப்பிவைத்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ‘கண்டதுண்டமாய் வெட்டிக் கொல்லப்பட்டார்’ என்று அந்த மகனைப் பற்றிய செய்தி வந்ததும் அத்தனை வலியும் அவருள் அமுங்கிப் போய், வெளிவந்தன இறை நேசமும் மிதமிஞ்சிய பக்குவ வார்த்தைகளும்.

“இத்தகைய ஒரு நிகழ்வுக்காகத்தான் நான் அவனை வளர்த்தும் உருவாக்கியும் வந்தேன். என்னுடைய நற்கூலியையும் அவனுடைய பரிசையும் அல்லாஹ்விடமே தேடுகிறேன். சிறுவனாய் இருக்கும்போது, ஒருநாள் இரவு அகபாவில் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்து தந்தான் என் மகன். அதைப் பெரியவனானதும் நிறைவேற்றிவிட்டான். எனக்கு அல்லாஹ் வாய்ப்பளித்து முஸைலமாவை நான் நெருங்கினால், அவனது இழப்பிற்காக தங்களது முகத்தை அறைந்து கொண்டு துன்பத்தில் அரற்றுவதற்கு அவனுடைய மகள்களுக்கு நல்ல வாய்ப்பளிப்பேன்”

அது அடுத்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தது.

oOo

நபியவர்களின் மறைவிற்குப் பின்னரும் முஸைலமாவின் பிரச்சினை ஓயாமல் தொடர்ந்தது. இன்னும் சொல்லப்போனால் உச்சக்கட்டத்தை அடைந்தது. அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் இந்த விவகாரத்தில் முக்கியமாய்க் கவனம் செலுத்தினார். மதீனாவிலிருந்து கிளம்பியது முஸ்லிம்களின் படை. அதன் விபரங்களை இதர தோழர்களின் வரலாற்றில் நெடுக விரிவாய்ப் படித்தோம். அதனால் இங்கு நுஸைபாவின் பங்கை மட்டும் பார்ப்போம்.

கலீஃபா அபூபக்ரின் முஅத்தின் மதீனா நகர வீதிகளில் பொய்யன் முஸைலமாவை எதிர்த்துப் போரிட மக்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே சென்றார். தொழுகையின் அழைப்பிற்கு எப்படி முந்திக் கொண்டு ஓடி வருவார்களோ, அதேபோல்தான் போரின் அழைப்பிற்கும் கிளம்பினார்கள் அந்த மக்கள்.

நுஸைபா ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நாளாயிற்றே அது! போர் அழைப்புக் காதில் விழுந்ததும் “மகனே கிளம்பு” என்று தம்முடைய மகன் அப்துல்லாஹ்வுடன் வாளைத் தூக்கிக் கொண்டு, முஸ்லிம் படைகளுடன் யமாமாவை (சுட்டி) நோக்கி ஓடினார் உம்மு உமாரா. அங்கோ கடுமையான யுத்தம். முஸ்லிம்களுக்குப் பெரும் சவாலாய் அமைந்த யுத்தம் அது.

“அல்லாஹ்வின் விரோதி எங்கே? எனக்குக் காண்பியுங்கள். எங்கே அல்லாஹ்வின் அந்த விரோதி!” என்று, இரை தேடும் பெண் புலியைப் போன்று படை வரிசையினூடே சீற்றமுடன் பாய்ந்து முன்னேறிக் கொண்டிருந்தார் நுஸைபா. கடைசியில் அவனை அந்த அம்மையார் அடைந்தபோது, துண்டாடப்பட்டுக் கிடந்தான் முஸைலமா. வஹ்ஷி பின் ஹர்பு தமது ஈட்டியால் அவனுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அதைக் கண்டவுடன்தான் அமைதியும் உளநிறைவும் ஏற்பட்டது அந்த அம்மையாருக்கு.

உஹதுப் போரில் நுஸைபாவுக்குப் பன்னிரெண்டு விழுப்புண்கள் என்று பார்த்தோமா? இந்தப் போரில் பதினொன்று. தவிர, உஹதுப் போரின்போது தோள்பட்டையில் காயம் பட்ட அந்தக் கையை இந்தப் போரில் இழந்திருந்தார் அவர்.

போரில் கலந்துகொண்டார்கள்; காயமுற்றார்கள்; அங்கங்களை இழந்தார்கள் என்று எளிதாய் எழுதிவிடுகிறோம்; படித்துவிட்டு அடுத்த வரிக்கு நம் பார்வை தாவிவிடுகிறது. நவீன மருத்துவ வசதிகள் எதுவுமற்ற அக்கால கட்டத்தில் காயமுற்ற வீரர்களுக்கு அளிக்கும் சிகிச்சை முரட்டுத்தனமான ஒன்று. யமாமா போரில் காலித் பின் வலீத் தமக்கு நல்ல சிகிச்சை அளித்து கவனித்துக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார் நுஸைபா. அது எப்படியான சிகிச்சை?

எண்ணெய்யைக் கொதிக்க வைத்துக் காயங்களின் மேல் ஊற்றுவார்கள். அது கிருமி நாசினியாகவும் காயத்தைத் தீய்த்தும் உதவுகின்ற மருத்துவம். எவ்விதமான மயக்க மருந்தோ, வலி மரத்துப்போகும் மருந்துகளோ இல்லாத அக்காலத்தில் இந்தச் சிகிச்சைக்கு உட்படும் வேதனை எப்படி இருக்கும்? ‘அதைவிட அங்கத்தை இழந்துவிடுவது எவ்வளவோ மேல்’ என்று கூறியிருக்கிறார் நுஸைபா.

நாமெல்லாம் மனம் மரத்துப்போய், சொகுசில் வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்கிறோம்.

இத்தகு வேதனைகளையும் வலியையும் தாமே முன்வந்து இழுத்து போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு என்ன இருந்தது? அங்கங்களை இழந்தாலும் பரவாயில்லை, உயிரையேகூட இழந்தாலும் பரவாயில்லை என்று ஏன் களம் புகுந்தார்கள்? பொருளாசையா? பதவி ஆசையா? அந்த மண்ணாசையெல்லாம் இல்லை; சுத்தமாக இல்லை.  இறைவனும் இறைத் தூதரும் இறை மார்க்கமும் மட்டுமே பிரதானம்; மறுமை ஈடேற்றம் மட்டுமே குறிக்கோள். பெரும் திருப்தியுடன் மதீனா திரும்பியவர், கலீஃபா உமர் (ரலி) அவர்களின் கிலாஃபத்தில் ஹிஜ்ரீ 13 வரை உயிர் வாழ்ந்து, இறவாப் புகழடைந்தார் நுஸைபா.

ரலியல்லாஹு அன்ஹா!

www.satyamargam.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: