மனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது. மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச் சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை!
மறுமையின் முன்னோட்டமாக – மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம் அல்லது நரகத்தைத் தீர்மானிக்கும் இடமாக மண்ணறை அமைந்துள்ளது. மனிதனின் உயிர் கைப்பற்றப்பட்டு, மரணித்தவுடன் நடக்கும் நிகழ்வுகளை குர்ஆன், சுன்னா விவரித்திருப்பதிலிருந்து மரணித்த ஆன்மாவின் வாழ்க்கை என்பது மனிதனின் புலன்களுக்கு எட்டாத் தனியொரு உலகம் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளங்கலாம். ஆன்மாக்களின் மண்ணறை வாழ்க்கை மறைவானது என்றாலும் அவற்றை நம்பவேண்டும் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் நிலைப்பாடு!
மரணித்தவரின் மண்ணறை வாழ்க்கையை, மரணிக்கவிருக்கும் மனிதன் சிறிதளவேனும் அறிந்து கொண்டால் அதுவே பெரும் படிப்பினையாகும். எனும் நோக்கில் மண்ணறை விசாரணைக் குறித்து அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்த சில செய்திகள் இங்குத் தரப்படுகின்றன.
இறைவசனங்கள்:
நமது வசனங்களைப் பொய்யெனக் கொண்டு, அவற்றை விட்டும் பெருமையடிப்பவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம் (அல்குர்ஆன் 7:40).
இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான் (அல்குர்ஆன் 14:27).
அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக வாழுங்கள்; இன்னும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார் (அல்குர்ஆன் 22:31).
திண்ணமாக, (கடுங்காவல் கைதிகளின் ஏடான) ஸிஜ்ஜீனில் தீயோர்களின் விதிப்பதிவு உள்ளது (அல்குர்ஆன் 83:7).
திண்ணமாக, (மேன்மக்களின் ஏடான) இல்லிய்யீனில் நல்லோர்தம் விதிப்பதிவு உள்ளது (அல்குர்குர் 83:18).
நபிமொழிகள்:
அன்ஸாரிகளில் ஒருவரின் (ஜனாஸா) இறுதிக் கடனை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்குக் குழிதோண்டி முடிக்கப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி, எங்களின் தலைகள் மீது பறவை இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்களின் கையில் குச்சியொன்று இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் தரையில் குத்திக்கொண்டிருந்தார்கள்.
பின்னர், தமது தலையை உயர்த்தி, “அடக்கத்தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறிவிட்டுத் தொடர்ந்து கூறலானார்கள்:
“இறைநம்பிக்கை கொண்ட அடியார் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று, மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து இறங்கி அவர்களிடம் வருவர். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப் போன்று ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் கஃபன் (பிரேத) ஆடைகளில் ஓர் ஆடையும் சொர்க்கத்தின் வாசனைத் திரவியங்களில் ஒன்றும் இருக்கும். இறுதியில், அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமர்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். அவர், ‘தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும் அன்பையும் நோக்கி நீ புறப்படுவாயாக’ என்பார்.
அப்போது தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று (அவரது உடலிலிருந்து) உயிர் வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக்கொள்வார். அவர் எடுத்ததும் கண்ணிமைக்கும் நேரம்கூட அந்த உயிரை அவரது கையில் மற்ற வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். இறுதியில் அதை அவர்கள் வாங்கிக்கொண்டு (தாம் கொண்டு வந்த) பிரேதத் துணியில் வைத்து அந்த வாசனைத் திரவியத்தைப் பூசுவார்கள். பூமியின் மேற்பரப்பில் கிடைக்கும் கஸ்தூரியின் உயர்தரமான நறுமணத்தைப் போன்றதொரு நறுமணம் அதிலிருந்து வெளிவரும்.
பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டாத்தாரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், ‘இந்தத் தூய உயிர் யாருடையது?’ என்று கேட்பர். அதற்கு அவர்கள், ‘இன்னாரின் மகன் இன்னார்’ என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அழகான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்தை வானவர்கள் அடைவார்கள்.
அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். அவருக்காக அது திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலிருக்கும் இறை நெருக்கம்பெற்ற வானவர்கள் அந்த வானத்திலிருந்து அடுத்த வானம்வரை அவரைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் அவர் ஏழாவது வானத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், ‘என் அடியானின் (வினைப்) பதிவேட்டை (நல்லோர்களின் வினைகள் பதிவு செய்யப்பட்ட) இல்லிய்யூன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள். அவரை மறுபடியும் மண்ணுக்கே அனுப்புங்கள், ஏனெனில் அதிலிருந்தே அவர்களை(மனிதர்களை)ப் படைத்தேன்; அதற்கே அவர்களை நான் திருப்பி அனுப்புவேன். (பின்னர்) மற்றொரு முறை அதிலிருந்தே அவர்களை நான் வெளியாக்குவேன்’ என்று கூறுவான்.
பின்னர் அவரது உயிர் (மண்ணறையிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை (எழுப்பி) அமரவைப்பர். அவ்விருவரும் அவரிடம், ‘உம்முடைய இறைவன் யார்?’ என்று கேட்பர். அதற்கு, ‘என் இறைவன் அல்லாஹ்’ என்று அவர் பதிலளிப்பார். அடுத்து, ‘உமது மார்க்கம் எது?’ என்று அவ்விருவரும் அவரிடம் கேட்பர். ‘எனது மார்க்கம் இஸ்லாம்’ என்று அவர் கூறுவார்.
பிறகு ‘உங்களிடையே அனுப்பப்பட்ட இன்னார் யார்?’ என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் அவரிடம் கேட்பர். ‘அவர் அல்லாஹ்வின் தூதர்’ என்று அவர் பதிலளிப்பார். அவ்விருவரும் ‘அது எப்படி உமக்குத் தெரியும்?’ என்று அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், ‘நான் அல்லாஹ்வின் வேதம் (குர்ஆனைப்) படித்தேன்; அதன் மீது நம்பிக்கை கொண்டேன்; உண்மையென ஏற்றேன்’ என்று கூறுவார்.
Filed under: இஸ்லாம் | Leave a comment »