நன்றே செய்க! அதை இன்றே செய்க

ஏக இறைவனின் திருப்பெயரால்….

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُواْ الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُواْ يَأْتِ بِكُمُ اللّهُ جَمِيعًا إِنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ 148

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்!நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். அல்குர்ஆன்: 2.148


நற்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிருத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான் காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான்.

ஒருவர் தொழாதவறாக இருப்பார் தொழாமல் இருப்பது சரியல்ல தொழ வேண்டும் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அதற்கடுத்த நேரத் தொழுகைக்கான அழைப்பொலியை எதிர்பார்த்து பள்ளிக்கு விரைந்திட வேண்டும்.

தொழக் கூடியவராக இருப்பார் ஆனால் வைகரைத் (ஃபஜ்ரு) தொழுகையை தொழாதவராக இருப்பார் மற்ற நேரத் தொழுகைகளை தொழுது கொண்டு ஃபஜ்ரை தொழாமல் இருப்பது சரியல்ல நாளை முதல் அதையும் தொழுவதற்கு தொடங்கிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அலாரத்தை வைத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்து தொழுதிட வேண்டும்.

இன்னாருக்கு இன்னத் தேவைக்காக இவ்வளவு கொடுத்து உதவிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்;ததுமே தாமதிக்காமல் கொடுத்து உதவிட வேண்டும்

ஏழு நிலைகளை நீங்கள் அடைவதற்கு முன் நற்செயல்களைக் கொண்டு முந்திக்கொள்ளுங்கள்.

1- மறதியில் ஆழ்த்தும் வறுமை,

2- அநீதியிழைக்கத் தூன்டும் செல்வம்,

3- உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்,

4- சொல்லை பலவீனப் படுத்தி விடும் முதுமை,

5- விரைந்து வரும் மரணம்,

6- தஜ்ஜாலின் வருகை,

7- இறுதி தீர்ப்பு நாள்,

என்று இதைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி

மேற்கானும் ஏழு நிலைகளை மனிதன் அடைந்து விட்டால் நற்செயல்கள் புரிவது கடினமாகி விடும். உதாரணத்திற்கு முதுமையும், நோயும் வந்து விட்டால் மரண பயமும், மறுமை சிந்தனையும் வரும் அப்பொழுது தனது மறுமை நிலையை சீர் செய்து கொள்வதற்காக தன்னிடத்தில் இருக்கும் செல்வத்தில் இன்ன ஆளுக்கு இன்ன தொகையை தர்மம் செய்து விடு, இன்ன நிலத்தை இன்ன பள்ளிவாசலுக்கு வக்ஃப் செய்து விடு என்று தன்னுடைய வாரிசுகளிடம் சொல்வார் ஆனால் அவைகள் நடக்காமல் போய் விடுவதற்கே அதிக வாய்ப்பு உண்டு. காரணம் அவர் நோய்வாய்ப்பட்டு படுக்கைக்கு சென்றதும் அவருடைய செல்வங்களில் இன்னவைகள் இன்னவருக்கென்று அவருடைய வாரிசுகளால் முன்கூட்டியேப் பிரிக்கப்பட்டிருக்கும் அதனால் அவர் நோய்வாய்ப்பட்டப் பின் தனது மறுமை நிலையை சீர் செய்து கொள்வதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இரைக்கும் நீர் போன்றவைகளாகவே மாறும். ஆகவே ஒவ்வொருவரும் மேற்காணும் ஏழு நிலைகளை அடைவதற்கு முன்னரே தாமதிக்காமல் இயன்றவரை நற்செயல்கள் புரிந்திட முயற்சி செய்திட வேண்டும்.

இருள் நிறைந்த இரவின் பகுதிகள் போல அடுக்கடுக்காக வரும் குழப்பங்களுக்கு முன்பாக நற்செயல்களைக் கொண்டு முந்திக் கொள்வீர்களாக! (அந்நேரத்தில்) ஒரு மனிதன் காலையில் இறைநம்பிக்கையாளனாக இருப்பான் மாலையில் இறை நிராகரிப்பவனாக மாறிவிடுவான், அல்லது மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருப்பான். காலையில் இறை நிராகரிப்பாளனாக மாறி விடுவான். உலகின் அற்பமான பொருளுக்கு மார்க்கத்தை விற்று விடுவான். என்று இதைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: முஸ்லிம்

இன்று நாம் பார்க்கின்றோம். ஒரு பயானை (மார்க்க சொற்பொழிவை) கேட்கும்பொழுது உள்ளம் இறைநம்பிக்கையில் ஊறிப்பேயிருக்கும் மறுமையே உறுதி என்றும் நற்செயல்கள் புரிவதே நன்மையை ஈட்டித்தரும் என்றும் நம்பி இருப்போம். அடுத்து சிறிது நேரத்திலெல்லாம் வீதியோரம் நடந்து சென்று கொண்டிருக்கையில் பலான சினிமாப் படப் போஸ்டர் ஒன்றைப் பார்த்து விட்டால் உள்ளம் ஊசலாடத் தொடங்கும் உதாரணத்திற்காகவே பலான போஸ்டரைக் குறிப்பிடுகிறோம் அதையும் தாண்டி உள்ளத்தை தடுமாறச் செய்யும் எண்ணற்ற நிகழ்வுகள் கண்முன்னே நிகழும்பொழுதும், தடுமாறி அதில் வீழும் நிலை ஏற்படும் பொழுதும் அந்தந்த நிலைதடுமாற்றத்திற்குத் தகுந்தாற்போல் இறைநம்பிக்கையை இழந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இதுப்போன்றதொரு தீமையால் மூழ்கும் காலம் வருவதற்கு முன்னதாகவே நற்செயல்களை முற்படுத்தி இறைநம்பிக்கயை வலுப்படுத்திக் கொண்டு மறுமைiயில் வெற்றிப்பெற முயற்சிக்க வேண்டும்.

காலத்தை குறைக் கூறி நாமும் தீமையில் மூழ்கலாமா ?

தீமைகள் நிறைந்த காலத்தில் வாழ்ந்து வருவதால் அதில் நற்செயல்கள் புரிவது கடினம் என்று காலத்தை குறைக் கூறி நாமும் தீமையில் மூழ்கிட முடியாது. நிர்பந்தம் தவிற வேறு எந்த சாக்குப் போக்கும் தீமை செய்வதற்கு ஆகுமானதல்ல நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலம் எவ்வளவோ மேலானது இனிவரும் காலமே இதை விட மோசமானதாக இருக்கும் என்று கருதிக் கொண்டு நற்செயலை முற்படுத்த வேண்டும் என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்கு கூறித் தந்துள்ளார்கள்.

நாங்கள் நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் (இராக்கின் ஆளுநர்) ஹஜ்ஜாஜ் பின் யூசுப் எங்களுக்கு செய்யும் கொடுமைகளைப் பற்றி முறையிட்டோம். அதற்கு அனஸ்(ரலி) அவர்கள் பொறுமை கொள்வீர்களாக! ஏனெனில் எந்தக் காலம் வந்தாலும் அதற்கு பிந்திய காலம் அதனைவிட தீங்கானதாகவே இருக்கும். நீங்கள் உங்கள் இரட்சகனை சந்திக்கும் வரை (கியாமத் நாள்வரை) இவ்வாறே இருக்கும் எனக்கூறிவிட்டு, இதனை நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களிடமிருந்து செவி மடுத்துள்ளேன் என்று அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்ததாக ஜூபைர் பின் அதீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி

நாம் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இந்தக் காலம் எவ்வளவோ மேலானது இனிவரும் காலமே இதைவிட மோசமானதாக இருக்கும் என்றுக்கருதி ஒவ்வொரு ஜெனரேசனும் நியாயத் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கைக் கொண்டு காலதாமதம் செய்யாமல் இயன்றவரை நல்லறம் செய்திடல் வேண்டும். காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஷைத்தானுக்கு அது சாதகமாகவே அமைந்து விடும்.

நன்றே செய்க! அதை இன்றே செய்க !  என்றும் தமிழில் கூறுவதுண்டு.

நற்செயல் புரிய வேண்டும் என்ற சிந்தனை மனதில் தோன்றியதும் தாமதிக்காமல் அவற்றை செய்து முடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கிட வேண்டும் என்பதையே மேற்காணும் திருமறைக் குர்ஆனும், நபிமொழியும், தமிழ் பழமொழியும் உணர்த்துகிறது.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

நன்றி:Masood


 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: