அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?

முஸ்லிம்களின் அடிப்படையான நம்பிக்கையில் ஒன்று, அல்லாஹ்வையும் அவனுடைய பண்புகளையும் தெரிந்து கொள்வதாகும். இதுவே ஈமானின் கடமைகளில் முதல் கடமையாகும். இதுபற்றி நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் பரவலாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கையை மட்டும் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அதாவது, அல்லாஹ் எங்கும் இருக்கின்றான். தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான் என்ற நம்பிக்கை தவறானதாகும். இப்படி ஒரு முஸ்லிம் நம்புவது, குர்ஆனுக்கும் நபிகளாரின் வழிமுறைக்கும் மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான் என்பதே சரியான கொள்கையாகும். பின்வரும் குர்ஆன் மற்றும் ஹதீதுகளும் அல்லாஹ் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹுவின் கூற்றுக்கள்:

1. அர்ரஹ்மான் அர்ஷின் மீது இருக்கின்றான். (அல்குர்ஆன் 20:5)

அதாவது, அல்லாஹ் உயர்வான இடத்தில் இருக்கின்றான் என்பதாக பல தாபிஈன்கள் இந்த ஆயத்திற்கு விளக்கமளிக்கின்றார்கள். இந்தச் செய்தி, புகாரியில் பதியப்பட்டிருக்கின்றது.

2. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொருகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும். (அல்குர்ஆன் 67: 16)

அதாவது, வானத்தில் இருப்பவன் என்பதின் கருத்து, அல்லாஹ் என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

3. அவர்கள் தங்களுடைய மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள். (அல்குர்ஆன் 16:50)

இங்கு, அவர்கள் என்று கூறப்பட்டிருப்பது மலக்குகளாகும். அவர்கள் அவர்களுக்கு மேலிருப்பவனை பயப்படுகிறார்கள் என்றால், அந்த அல்லாஹ்வைத் தான் குறிக்கின்றது. இந்த வசனத்திலிருந்து அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.

4. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4 :158)
அதாவது, வானத்திற்கு உயர்த்திவிட்டான். இந்த ஆயத்தும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

5. இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ் உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான். இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6: 3)

இமாம் இப்னு கஸீர்(ரஹ்) தமது நூலில் இந்த வசனத்திற்கான விளக்கத்தில் அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என “ஜஹ்மிய்யா” என்னும்வழிகெட்ட பிரிவினர் கூறுவது போல கூறமாட்டோம். மாறாக அல்லாஹ் அவர்கள் கூறுவதையெல்லாம் விட உயர்வான நிலையில் இருக்கிறான் என, குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவதாக குறிப்பிடுகின்றனர்.

ஆயினும், நீங்கள் எங்கிருந்தாலும் அவன் (அல்லாஹ்) உங்களோடு உள்ளான். (அல்குர்ஆன் 57: 04) என்ற வசனத்தின் கருத்து என்னவெனில், நீங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவன் உங்களை கண்காணித்துக் கொண்டும் உங்களின் செயல்களை கவனித்துக் கொண்டும் இருக்கிறான். அனைத்துமே அவனது ஞானத்திற்கும் பார்வை மற்றும் செவிப்புலன்களுக்கும் உட்பட்டவைதாம் என்பதாகும். இதுபோன்று வரக்கூடிய மற்ற ஆயத்துகளின் கருத்துகளும் இதுவேயாகும்.

நபிமொழிகள்:

1. நபி(ஸல்) அவர்கள் இறைவனுடன் உரையாடுவதற்கு (மிஃராஜ்) விண்ணேற்றத்தின் போது வானத்திற்குச் சென்றார்கள். அப்போதுதான் ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது. (புகாரி, முஸ்லிம்)

2. (மக்களே) என்னை நீங்கள் நம்பமாட்டீர்களா? நானோ வானத்திலிருப்பவ(னான இறைவ)னின் நம்பிக்கைக்கு உரியவனாவேன்! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3. பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள். வானில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

4. நபி(ஸல்) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணிடத்தில் அல்லாஹ் எங்கே இருக்கிறான்? எனக் கேட்டபோது, அந்தப் பெண் வானில் இருக்கிறான் எனக் கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இந்தப் பெண்ணை விடுதலை செய்து விடுங்கள். இவள் முஃமினான பெண்தான் எனக்கூறினார்கள். (முஸ்லிம்)

இந்த நபிமொழியிலும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.

5. அர்ஷ் நீரின் மீது உள்ளது. அல்லாஹ்வோ அர்ஷின் மீது உள்ளான். அவன் நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

நபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுக்கள்:

1. நபி(ஸல்) அவர்கள் மரணித்த நாளில் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள், ‘யார் அல்லாஹ்வை வணங்குகின்றீர்களோ, அவர்கள் அறிந்து கொள்ளுங்கள், அவன் வானில் இருக்கிறான், அவன் மரணிக்கமாட்டான். (தாரமி)

2. எங்களின் இரட்சகனை நாம் எப்படி தெரிந்து கொள்வது என அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கவர்கள், அவன் தனது படைப்பினங்களை விட்டும் தனித்து வானில் அர்ஷின் மீது உள்ளான் எனக்கூறினார்கள்.

இதனின் பொருள்: அல்லாஹ் அர்ஷின் மீது தன் படைப்பினங்களை விட்டும் தனித்திருக்கின்றான், அவன் படைப்பினங்களில் யாரும், அவனின் உயர்வுக்கு ஒப்பாக முடியாது.

3. நான்கு இமாம்களும் அல்லாஹ் அர்ஷுக்கு மேல் இருக்கிறான் என்ற விஷயத்தில் ஒற்ற கருத்தில் இருக்கின்றார்கள். படைப்பினங்களில் அவனுக்கு யாரும் ஒப்பாக முடியாது எனவும் கூறுகின்றார்கள்.

4. தொழுபவர்கள் ஸுஜூது செய்யும் போது (சுப்ஹான றப்பியல் அஃலா) ‘உயர்வான எனது இறைவன் தூய்மையானவன்’ என கூறுவதும், பிரார்த்தனை செய்பவர்களும் பிரார்த்தனை செய்யும் போது அவர்களின் இரு கரங்களையும் வானத்தின் பக்கம் உயர்த்துவதும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை காட்டுகின்றது.

5. தெளிவான சிந்தனையும் அல்லாஹ் வானில் இருக்கிறான் என்பதையே உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் எங்குமிருக்கின்றான் என்பது உண்மையானால், நபி(ஸல்) அவர்கள் அது பற்றி கூறியிருப்பார்கள். தமது தோழர்களுக்கும் அறிவித்திருப்பார்கள். அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்றால், உலகத்தில் அசுத்தமான இடங்களும் உண்டு, அந்த இடங்களிலும் அல்லாஹ் இருக்கின்றானா? என்ற கேள்வியும் எழும்! அல்லாஹ் அப்படிப்பட்ட தன்மைகளை விட்டும் தூரமானவன்.

அல்லாஹ் நம்மோடு எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்ற கூற்று, அல்லாஹ் ஒன்றுக்கும் மேற்பட்டவன் என்பதை குறிக்கும். ஏன் என்றால் இடங்கள் எண்ணற்றவை, வித்தியாசமானவை. அல்லாஹ் ஒருவன்தான் எனும்போது, அவன் பலராக ஆகுவதற்கு சாத்தியமேயில்லை. எனவே அவன் எல்லா இடத்திலும் உள்ளான் என்றால் அவன் ஒருவன் என்ற கூற்று பொய்யாகிவிடும். ஆகவே, அல்லாஹ் வானில்தான் அர்ஷுக்கு மேல் இருக்கிறான். அதே நேரத்தில் எங்கும் வியாபித்திருக்கும் அவனது ஞானத்தின் மூலம் நாம் எங்கிருந்தாலும் நமது சப்தத்தை செவிமடுத்துக் கொண்டும் நம்மைப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றான் என்பதே சரியான முடிவாகும்.

மேலே கூறப்பட்ட குர்ஆனுடைய வசனங்கள், நபிமொழிகள், நபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றின் மூலம் அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேல் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பது தெளிவான ஒன்றாகும். இதற்குப் பிறகு அல்லாஹ் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்ற கொள்கையிலிருந்து முற்றாக தவிர்ந்து கொள்ளுங்கள். தவறான கொள்கைகளிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

 

பிலால் (ரழி)

பிலால் (ரழி) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.

பிலால் (ரழி) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரழி) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். அன்றைய அரபு உலகில் புரையோடிப் போயிருந்த பல தெய்வக் கொள்கையிலும், புரோகிதத்திலும், தனிமனித வழிபாட்டிலும் திளைத்திருந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரழி) அவர்களும் ஒருவர். அபரிதமான இணைவைப்பாளர்களுக்கு இடையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோரின் நிலை பரிதாபகரமாக இருந்தது. இணைவைப்பாளர்களின் கொடுமைக்கும் சித்தரவதைக்கும் ஆளாயினர்.

ஏகத்துவக் கொள்கைளின் எதிரில் இணைவைப்பும், தனிமனித வழிபாட்டின் அனுஷ்டானங்களும் புரோகிதமும் தவிடு பொடியாவதைக் கண்டு வெகுண்ட மக்கத்து இணைவைப்பாளர்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொன்டோரைக் கொடுமைப் படுத்துவதில் சிறிதும் சளைக்கவில்லை. உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால்(ரழி) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து தம்வம்சத்தாரின் துணையுடன் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரழி) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் (ரழி) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை அவர்களின் உடல் சித்தரவதையால் சின்னா பின்னப் படுத்தப்பட்டு கசையடி, அடி உதை என தண்டனைகள் அதிகரிக்கப்பட்டும் கூட ”அஹதுன் அஹதுன்’ என்றே கூறினார்கள்.

இணைவைப்பாளர்களின் இத்தண்டனைகள் சித்தரவதைகள் யாவுமே பிலால் (ரழி) அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கையை மேன்மேலும் உறுதிப் படுத்தவே உதவியது. அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரழி) அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்கர் (ரழி) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால்(ரழி)அவர்களை விலைக்கு கேட்கிறார்கள். 10 தங்க காசுகளுக்கு பிலால் (ரழி) அவர்களை அபூபக்கர் (ரழி) அவர்களிடம் உமைய்யா விற்று விட்டு எக்காளத்தில் கூறுகிறான் இவரை நீர் ஒரு தங்கக் காசுக்கு கேட்டிருந்தாலும் நான் விற்றிருப்பேன் எனக் கூறுகிறான். பிலால் (ரழி) அவர்களுக்காக வேண்டி நீ 1000 தங்கக் காசுகள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என அபூபக்கர்(ரழி) அவர்கள் அவனுக்கு பதில் அளித்தார்கள். பின்னர் பிலால்(ரழி) அவர்களை அபூபக்கர் (ரழி) அவர்கள் விடுதலை செய்தார்கள்.

மதினாவிற்கு இடம் பெயர்ந்தபின் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த பிலால்(ரழி)அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரழி)யை நியமிக்கிறார்கள். அபிஷீனிய அடிமைக்கு இத்தனை பெரிய அந்தஸ்த்தா? என இணைவைப்பாளர்கள் எரிச்சலடைந்தனர். முதல் இமாம் நபி (ஸல்) முதல் முஅத்தீன் பிலால் (ரழி) என நாம் அறிகிறோம்.

பிலால் (ரழி) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை(முன்னாள் எஜமான்) பிலால் (ரழி) அவர்கள் கொன்றார்கள். மக்கா வெற்றி கொள்ளப் பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரழி) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப் படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே. நபிகளாரின் மரணத்திற்குப் பின் அண்ணல் நபிகளின் மீது கொண்ட அளவு கடந்த பற்றினால் பாங்கு சொல்லும் போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நினைவுக்கு வருவதை உணர்ந்த பிலால் (ரழி) பாங்கு கூற மறுக்கிறார்கள். தான் சிரியா சென்று ஜிஹாத் செய்யப்போவதாக அபூபக்கர் (ரழி) யிடம் சொல்கிறார்கள். அபூபக்கர் (ரழி) பிலால் (ரழி) அவர்களை பாங்கு கூறுமாறு உத்தரவிடுகிறார்கள். அதற்கு பிலால் (ரழி) அவர்கள் நீர் எம்மை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது அல்லாஹ்வின் அருளை நாடியா? அல்லது உம் கட்டளைக்கு கீழ்படிய வேண்டியா? என்று வினவினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களுக்கு சிரியா செல்ல அனுமதி தந்தார்கள். சிரியா சென்றடைந்த பிலால் (ரழி) அவர்களை உமர் (ரழி) அவர்கள் தன் ஆட்சி காலத்தில் அங்கு சென்று சந்தித்து பாங்கு கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். பாங்கு கூறுகிறார்கள் பிலால் (ரழி) அவர்கள்.

பனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரழி) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. தம் 70 வது வயதில் சிரியாவின் தலை நகரான டமாஸ்கஸில் இயற்கை எய்தினார்கள். மிஃராஜ் சென்று திரும்பிய நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது? என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள்.

படிப்பினை :

அல்லாஹ் அருள் மறையில் எங்கெல்லாம் ஈமான் கொள்வதைக் குறிப்பிடுகிறானோ அங்கெல்லாம் நல்லறங்கள் புரிவதையும் இணைத்தே கூறுகிறான்.

நான் எதை ஏவியுள்ளேனோ அதை இயன்றவரை செய்யுங்கள். நான் எதைத் தவிர்ந்து கொள்ளக் கூறினேனோ அதை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளுங்கள். எனும் நபி மொழிக் கேற்ப பிலால் (ரழி) அவர்களின் வாழ்வு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்களின் வழியில் நாமும் செயல்பட்டு மறுமையில் வெற்றியடைய அல்லாஹ் அருள் புரிவானாக.

thanks:http://chittarkottai.com

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள். இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது. இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள். உணவு, உடை அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, ”நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : அபூதாவூத் 1830

நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள்.

அத்துடன் மட்டும் நபி (ஸல்) அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம். ”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56

சுய மரியாதையைப் போற்றுதல் மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ”நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல் : புகாரி 4942, 5204

மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும். அடுத்ததாக ‘பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள்.

அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும். மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது.

பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத் தொடர்கின்றது.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்! ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃலிக்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா (ரலி) எழுந்து, நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள். மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகின்றார்கள். ”பகீஃலிக்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்” என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்) நூல் : முஸ்லிம் 1619

இங்கு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும் எழுப்பவில்லை. அதன் பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ ‘பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’ என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல! அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 1119

மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, ”உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் செல்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (950)

இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது? இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மனைவியின் உணவு, உடை, அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக! மாநபி வழியில் நடை போடுவோமாக!

Thanks:tntj.net